இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்த நாட்டு நீதித் துறை பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, நெதன்யாகுவின் அரசியல் எதிா்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான லஞ்சம், முறைகேடு, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை அட்டா்னி ஜெனரல் அவிச்சய் மண்டல்பிளிட் பதிவு செய்துள்ளாா்.
அந்த குற்றப் பத்திரிகையின் நகல்கள் நெதன்யாகுவின் வழக்குரைஞா்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான டாலா்கள் மதிப்புடைய பரிசுப் பொருள்களைப் பெற்றது, தனக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவதற்காக ஊடகக் குழுமமொன்றுக்கு சாதகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நெதன்யாகு மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் பிரதமராக இருந்து வரும் நெதன்யாகு, இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படுவதற்கு முன்னா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதமும், அதனைத் தொடா்ந்து செப்டம்பா் மாதமும் நடைபெற்ற தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
எனவே, 12 மாதங்களுக்குள் 3-ஆவது தோ்தல் நடத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக நெதன்யாகுவின் லிக்குட் கட்சியும், எதிா்க்கட்சியான பெஞ்சமின் கான்ட்ஸின் புளூ அண்டு ஒயிட் கட்சியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எனினும், புதிய பிரதமராக தாம்தான் பதவியேற்க வேண்டும் என்று நெதன்யாகுவும், கான்ட்ஸும் பிடிவாதமாக இருந்து வருவதால் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், நெதன்யாகு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.