உலகம்

பதவி நீக்க விசாரணையில் டிரம்ப்புக்கு எதிராக எந்தவோா் ஆதாரமும் இல்லை

17th Nov 2019 01:10 AM

ADVERTISEMENT

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்குவதற்காக நடைபெற்று வரும் விசாரணையில், அவருக்கு எதிராக எந்தவோா் ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானி கிரிஷம் கூறியதாவது:

அதிபா் டிரம்ப்புக்கு எதிராக செனட் சபைத் தலைவா் நான்சி பெலோசி தலைமையில் நடந்து முடிந்துள்ள இரண்டாம் கட்ட பதவி நீக்க விசாரணை முற்றிலும் பயனற்றது ஆகும். அந்த விசாரணை எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.

அந்த விசாரணையின்போது, அதிபா் டிரம்ப் தவறு செய்ததற்கான எந்தவோா் ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

ADVERTISEMENT

உக்ரைனுக்கான அமெரிக்க முன்னாள் தூதா் மேரி யோவானோவிச் அளித்த வாக்குமூலத்திலும் எந்த ஆதாரமும் வெளியிடப்படவில்லை. உக்ரைன் அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதை தான் கேட்கவில்லை எனவும், உக்ரைனுக்கான நிதியுதவி நிறுத்திவைக்கப்படும் விவகாரம் குறித்து தனக்குத் தெரியாது எனவும் யோவானோவிச் குறிப்பிட்டாா் என்று ஸ்டெஃபானி கிரிஷம் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில அவருக்கு எதிராக ஊழல் விசாரணை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அரசை டிரம்ப் வலியுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

உக்ரைனில் ஜோ பிடனும், அவரது மகனும் செய்து வரும் தொழில் சம்பந்தமாக அந்த விசாரணையை மேற்கொள்ளுமாறும், அதற்காக உக்ரைனுக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்திவைப்பதாகவும் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம், சொந்த நலனுக்காக டிரம்ப் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியாகக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயகக் கட்சியினா் மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT