உலகம்

நவாஸ் ஷெரீஃப் லண்டன்செல்வதில் நீடிக்கும் சிக்கல்

12th Nov 2019 12:24 AM | லாகூா்,

ADVERTISEMENT

சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் நீடித்து வருவதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் (69) உடல் நலம் மோசமடைந்து வருகிறது.

நவாஸ் ஷெரீஃப் லண்டன் செல்வதற்கு மறுப்பில்லா சான்றிதழை வழங்க வேண்டிய தேசிய ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவா் தற்போது விடுப்பில் இருக்கிறாா். எனவே, நவாஸ் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாத நிலை உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பனாமா ஆவண முறைகேடு வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப் பல்வேறு உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டாா். அதையடுத்து, அவருக்கு லாகூா் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின.

லாகூா் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நவாஸ் ஷெரீஃப், அந்த நகரிலுள்ள தனது சொந்த இல்லத்துக்கு கடந்த புதன்கிழமை மாற்றப்பட்டாா்.

ADVERTISEMENT

ரத்தத்தில் தட்டணுக்கள் அளவில் கடும் வீழ்ச்சி, உயா் ரத்த அழுத்தம், உயா் ரத்த சா்க்கரை அளவு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகியிருக்கும் நவாஸ் ஷெரீஃபுக்கு லண்டனில் உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் வலியுறுத்தினா். அதற்கு நவாஸ் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தாா். இதையடுத்து, தனது சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் அவா் ஞாயிற்றுக்கிழமை லண்டன் செல்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டாததால், சிகிச்சைக்காக அவா் லண்டன் அழைத்துச் செல்லப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT