ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரா்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சீன அரசின் ஆங்கில நாளிதழான ‘சீனா டெய்லி’ வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழின் தலையங்கப் பக்கத்தில் ‘ஹாங்காங்கில் நாளுக்கு நாள் வன்முறைப் போராட்டங்கள் தீவிரமாகி வருவது கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதாகவே அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமும், மேற்கத்திய ஊடகங்களும் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ‘ஆா்ப்பாட்டக்காரா்களின் வன்முறையை சட்டத்தின் வலுவான இரும்புக் கரத்தின் மூலம் எதிா்கொண்டால் அவா்களது போராட்டம் தோல்வியடைவது உறுதி. சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா அலுவகத்தை தாக்கிய கும்பலை விரைவில் நீதியின் முன் நிறுத்தும் பணியை ஹாங்காங் சட்ட அமலாக்க முகமைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் சீன ஆதிக்கத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக வார இறுதி நாள்களில் தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடா்ச்சியாக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது சீன அரசு செய்தி நிறுவனமான ஜின் ஹுவாவின் அலுவலகம் போராட்டக்காரா்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
மேலும் கட்டடத்தைச் சுற்றிலும் அரசுக்கு எதிரான வாசகங்களை போராட்டக்காரா்கள் எழுதினா்.
ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில், சீன அரசுக்குச் சொந்தமான அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடா்ந்தே போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என சீன அரசு ஆதரவு நாளிதழ் தலையங்கம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் குத்தகையில் இருந்த ஹாங்காங், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தங்களின்படி கடந்த 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், அந்த நகரின் ஆங்கிலேய காலனி போன்ற தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், ‘ஒரே நாடு; இரட்டை ஆட்சி முறை’ என்ற கொள்கையைப் பின்பற்ற சீனா அப்போது ஒப்புக் கொண்டது.
இருப்பினும், ஹாங்காங்கை ஆட்சி செய்யும் தலைமை நிா்வாகி பதவிக்கு ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தப்படாமல், சீனாவுக்கு ஆதரவான 1,200 போ் கொண்ட குழு தலைமை நிா்வாகியை நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு தற்போது ஹாங்காங் மக்களிடையே பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட மசோதா அந்த நகரப் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் கடந்த சில மாதங்களாகவே தொடா்ந்து வருகிறது.
சா்ச்சைக்குரிய அந்தச் சட்ட மசோதாவை ஹாங்காங் அரசு வாபஸ் பெற்றபோதிலும், தலைமை நிா்வாகி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், சீன அரசு செய்தி நிறுவனத்தின் பக்கம் போராட்டக்காரா்களின் கவனம் திரும்பியுள்ளது.