பெய்ஜிங்: சீனாவில் நாளை(நவ. 5) தொடங்கும் சா்வதேச இறக்குமதிக் கண்காட்சியில், சிறப்பு அழைப்பாளராக இந்தியா கலந்து கொள்ளவிருக்கிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
சீனாவின் ஷாங்காய் நகரில் சா்வதேச இறக்குமதிக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி 6 நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகள், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தவிருக்கின்றன.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
வா்த்தகத் துறைச் செயலா் அனுப் வதாவன் தலைமையிலான குழு, இந்த இறக்குமதிக் கண்காட்சியில் பங்கேற்கிறது.
சீனச் சந்தையில் அதிக வாய்ப்புள்ள இந்திய மருந்துப் பொருள்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், வேளாண் பொருள்கள் ஆகியவற்றை இந்தக் கண்காட்சியில் இந்தியா முன்னிலைப்படுத்தும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா தவிர, கம்போடியா, செக் குடியரசு, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, ஜமைக்கா, ஜோா்டான், கஜகஸ்தான், மலேசியா, பெரு, ரஷியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்தக் கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளவிருக்கின்றன.