மேற்கு ஆசியாவில் மேலும் 1,500 வீரர்கள் குவிப்பு: ஈரான் விவகாரத்தில் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

மேற்கு ஆசியப் பகுதியில் ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அந்தப் பகுதிக்கு கூடுதலாக 1,500 வீரர்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் மேலும் 1,500 வீரர்கள் குவிப்பு: ஈரான் விவகாரத்தில் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

மேற்கு ஆசியப் பகுதியில் ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அந்தப் பகுதிக்கு கூடுதலாக 1,500 வீரர்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு ஆசியப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க விரும்புகிறோம். எனவே, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
மேற்கு ஆசியப் பகுதிக்கு அனுப்பப்படவிருக்கும் வீரர்களின் எண்ணிக்கை சுமார் 1,500-ஆக இருக்கும் என்றார் அவர்.
ராணுவ வீரர்களுடன் கண்காணிப்பு விமானங்கள், போர் விமானங்கள், ராணுவப் பொறியாளர்களும் அனுப்பப்படவிருப்பதாக பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சர் பேட்ரிக் ஷனஹன் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் கூடுதலாக குவிக்கப்படவிருக்கும் "பேட்ரியாட்' ரக இடைமறி ஏவுகணைகளைக் கையாள்வதற்கு மட்டும் 600 வீரர்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்படுவதாக அவர் கூறினார்.
ஈரான் அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க உளவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, மேற்கு ஆசியப் பகுதிக்கு கூடுதல் படையினரை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளைகுடா பகுதியில் 4 எண்ணெய்க் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டது, சவூதி அரேபிய எண்ணெய் குழாய்களில் ஈரான் 
ஆதரவு பெற்ற யேமன் கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்களின் எதிரொலியாகவே மேற்கு ஆசியப் பகுதியில் கூடுதல் அமெரிக்கப் படைகள் 
குவிக்கப்படுவதாக அவர்கள்
தெரிவித்தனர்.
தங்களது நாடு அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்று ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் விலக்கிக் கொள்ளவும் சம்மதித்து, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
இதனால், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. அதன் விளைவாக, மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்கெனவே விமானம் தாங்கிக் கப்பல், பி-52 குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்களைக் குவித்த அமெரிக்கா, தற்போது அங்கு கூடுதலாக 1,500 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அனுப்பவிருப்பது இந்த விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

உலக அமைதிக்கு ஆபத்து!

மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா தனது படை பலத்தை அதிகரிப்பது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் சனிக்கிழமை கூறியதாவது:
எங்களது பிராந்தியத்தில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது மிகவும் ஆபத்தான செயலாகும். சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டியவை ஆகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com