மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பூஜ்யம்

மக்களவைத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக மேற்கு வங்க மாநிலத்தில் வரலாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போன சோகம் இந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக மேற்கு வங்க மாநிலத்தில் வரலாற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போன சோகம் இந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. 
அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், புதிய சக்தியாக உருவெடுத்துள்ள பாஜகவுக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவியது, இதனால் பல தொகுதிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையே கம்யூனிஸ்ட் கட்சிகளால் பிடிக்க முடிந்தது.
1964-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடக்கப்பட்டது முதல் மேற்கு வங்க மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டு வருகிறது. 1989, 1996, 2004 ஆகிய ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி அமைப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி முக்கியப் பங்கு வகித்தது. அப்போது, மேற்கு வங்கம்தான் அக்கட்சிக்கு கணிசமான தொகுதிகளைப் பெற்றுத்தந்தது. கடந்த 2004-இல் மட்டும் 42 தொகுதிகளில் அதிகபட்சமாக 26 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. 2009 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. 2014-இல் பெரும் சரிவு ஏற்பட்டு இரு தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தத் தேர்தலில் அதைவிடவும் மோசமடைந்து ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி தள்ளப்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக மேற்கு வங்கம் விளங்கியது. அங்கு 1977 முதல் 2011 -ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியே அங்கு இருந்தது. அதன் பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, மாநிலத்தில் பாஜகவும் எழுச்சி பெற்றுள்ளது இடதுசாரிக் கட்சிகளை முற்றிலும் சரித்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com