இலங்கை: 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றம்

இலங்கையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுவெடிப்பின் எதிரொலியாக, அங்கு சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட சுமார் 600 வெளிநாட்டினர்,

இலங்கையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுவெடிப்பின் எதிரொலியாக, அங்கு சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட சுமார் 600 வெளிநாட்டினர், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
 இதுகுறித்து உள்துறை அமைச்சர் வஜிர அபய்வர்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுழைவு இசைவு (விசா) காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியுள்ள சுமார் 600 வெளிநாட்டினர், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 200 பேர் இஸ்லாம் மத போதகர்கள் ஆவர்.
 நாட்டின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, மத போதகர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறையை கடுமையாக்குவதற்கு முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
 இலங்கையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்களிலும், 3 நட்சத்திர விடுதிகளிலும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.
 இதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; சுமார் 500 பேர் காயமடைந்தனர். இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
 இந்தச் சூழலில், நாட்டில் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த 200 மத போதகர்களை அந்த நாடு வெளியேற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com