புதன்கிழமை 17 ஜூலை 2019

காஸாவில் அதிகரிக்கிறது பதற்றம்: இஸ்ரேல் குண்டுவீச்சில் 6 பாலஸ்தீனர்கள் பலி

DIN | Published: 06th May 2019 01:55 AM

இஸ்ரேலுக்கும், காஸாவுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், அங்கு போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
 காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 பாலஸ்தீனத்திலுள்ள காஸாவின் ஒரு பகுதி, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த அமைப்பிருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சர்வதேச முயற்சியின் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக எல்லையில் அமைதி நிலவி வந்தது.
 இந்த நிலையில், சண்டை நிறுத்தத்துக்காக காஸாவுக்கு இஸ்ரேல் வழங்கி வரும் சில சலுகைகளை அதிகரிக்க வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை காஸா எல்லையில் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது ஏற்பட்ட மோதலில், 2 ஹமாஸ் அமைப்பினர் உள்பட 4 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
 அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் மீது சனிக்கிழமை 450-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸும், அதன் கூட்டு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாதும் பொறுப்பேற்றன.
 இந்தத் தாக்குதலில், 58 வயது இஸ்ரேலியர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின.
 இந்தத் தாக்குதலில், கர்ப்பிணி, அவரது குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், கர்ப்பிணியும், குழந்தையும் உயிரிழந்தது தங்களது விமானத் தாக்குதலால் இல்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
 இந்தச் சூழலில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை வீச்சைத் தொடர்ந்தால், மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும்படி தனது படையினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
 இதையடுத்து, அந்தப் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்ததைப் போன்ற முழு போர் வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 அந்தப் போரில், 2,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், 70-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் உயிரிழந்தனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்எல்லையில் அனுமதி
இந்திய எல்லையில் கடத்தலை முழுமையாக தடுக்க இயலாது: வங்கதேச எல்லை பாதுகாப்பு படை
இந்தியாவில் 41,331 பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர்: மக்களவையில் தகவல்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மீண்டும் அணுகுண்டு சோதனை?: வட கொரியா மறைமுக எச்சரிக்கை