ஈரானின் யுரேனிய ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானின் யுரேனிய ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
 ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தாலும், அந்த ஒப்பந்தம் ரத்தாகாமல் இருப்பதற்காக வழங்கியுள்ள சலுகைகள் தொடர்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
 இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டாகஸ் கூறியதாவது:
 பிராந்திய ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையிலும், தனது நாட்டு மக்களைத் துன்புறுத்தும் வகையிலும் ஈரான் அரசு நடந்து கொள்கிறது. அந்தத் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அந்த அரசை நிர்பந்திக்கும் பணிகளை டிரம்ப் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
 ஈரான் அணு ஆயுதங்களை அடையக் கூடாது என்பதை உறுதி செய்வதும் அந்தப் பணிகளில் ஒன்றாகும்.
 அந்த வகையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகை ரத்து செய்யப்படுகிறது என்றார் அவர்.
 எனினும், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகாமல் பாதுகாப்பதற்காக, அந்த ஒப்பந்தத்தின் பெரும்பான்மையான அம்சங்கள் தொடர்வதற்கு வழங்கியிருந்த அனுமதியை அமெரிக்கா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
 தனது அணு சக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்காக இல்லை என ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை மெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் மேற்கொண்டது.
 அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவருக்குப் பின் அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது எனக் கூறி, அதிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்.
 அதனைத் தொடர்ந்து, அணு சக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை டிரம்ப் மீண்டும் அமல்படுத்தி வருகிறார்.
 அதன் ஒரு பகுதியாகவே, தற்போது ஈரானின் யுரேனிய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com