143 பேருடன் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு

அமெரிக்காவில் பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது
143 பேருடன் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு

அமெரிக்காவில் பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும், அதிலிருந்த 143 பயணிகளும் அதிசய நிகழ்வாக உயிர் தப்பினர்.
 இதுகுறித்து ஜாக்ஸன்வில்லி கடற்படை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 கியூபா கடற்படை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் வடக்கு ஃபுளோரிடா நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் ஜாக்ஸன்வில்லி கடற்படை விமான தளத்தில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கியபோது, ஓடு பாதையிலிருந்து விலகி அருகிலிருந்த செயின்ட் ஜான்ஸன் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
 இந்த சம்பவத்தில், விமானத்துக்குள் இருந்த 136 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 ஜாக்ஸன்வில்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 ஆற்றுக்குள் விழுந்த விமானம் அதிருஷ்டவசமாக தண்ணீருக்குள் மூழ்காமல் மிதந்து கொண்டிருந்தது. இதனால், விமானத்துக்குள்ளே இருந்த எந்தவொரு நபருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 21 பேர் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
 விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று அந்த சுட்டுரை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 விபத்துக்குள்ளான விமான மியாமி ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விபத்து குறித்து உடனடியாக அந்த நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com