வியாழக்கிழமை 18 ஜூலை 2019

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் காஷ்மீர், கேரளாவுக்கு வந்தது ஏன்? இலங்கை ராணுவம் சந்தேகம்

DIN | Published: 04th May 2019 04:40 PM


இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தொடர் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள் காஷ்மீர், கேரளாவுக்கு வந்து போனதாக இலங்கை ராணுவ தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகே தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்து போனதாகவும், தாக்குதல் தொடர்பாக இந்தியா முன்கூட்டியே உளவுத் துறை தகவல்களை பகிர்ந்ததாகவும் இலங்கை ராணுவ தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகே முதன்முதலாக தெரிவித்துள்ளார். 

பிபிசி-க்கு அளித்த பேட்டியில் மகேஷ் சேனநாயகே தெரிவிக்கையில்,

"இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் காஷ்மீர், பெங்களூரு, கேரளாவுக்கு சென்றுள்ளனர். இந்த தகவல்கள் தான் எங்களிடம் உள்ளது. காஷ்மீர் மற்றும் கேரளாவுக்கு அவர்கள் ஒரு சில பயிற்சிகளை மேற்கொள்ள சென்றிருக்கலாம் அல்லது மற்ற நாடுகளில் உள்ள அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள சென்றிருக்கக்கூடும்.       

இந்த தாக்குதலை செயல்படுத்தியவிதம் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் பயணம் மேற்கொண்ட இடங்களை பார்க்கும்போது, வெளியில் இருந்து யாரேனும் இதை வழிநடத்தியிருக்கக்கூடும். 

எங்களிடம் ஒரு சில தகவல்கள் மற்றும் உளவுத்துறை பகிர்வுகள் இருந்தன. ஆனால், இங்கு ராணுவ உளவுத்துறை ஒருபுறம் உள்ளது, மற்றவை ஒருபுறம் உள்ளது. இன்றைக்கு அந்த இடைவெளியை அனைவராலும் பார்க்கமுடிகிறது. இதற்கு, அரசியல் தலைமை உட்பட உளவுத் துறை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பான அனைவரையுமே பழி கூறவேண்டும்.

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவிலான சுதந்திரம் மற்றும் அமைதி நிலவுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள். மக்கள் தற்போது அமைதியை அனுபவித்து வருகின்றனர். அதனால் தான் இலங்கை குறிவைக்கப்பட்டுள்ளது.  

நாட்டில் மதக் கலவரங்கள், வன்முறைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காக ராணுவத்தை களத்தில் இறக்கியுள்ளோம். ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை  நாட்டை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது" என்றார். 

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோட்டில்  இருவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த மாதம் சோதனை நடத்தியது நினைவுகூரத்தக்கது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நேபாளத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முடக்கம்
சூடான்: அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் ராணுவம் - எதிர்க்கட்சியினர் கையெழுத்து
ஹாங்காங் இளைஞர்களுக்கு ஆதரவாக மூத்த குடிமக்கள் ஊர்வலம்
இந்தோனேஷிய நிலநடுக்கம்: பலி 5-ஆக உயர்வு
தகுதி அடிப்படையில் குடியுரிமை: 57%-ஆக அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை