போர்க் குற்ற விசாரணை: இலங்கை அதிபரின் முடிவில் திடீர் மாற்றம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுதியளித்திருந்த அதிபர் சிறீசேனா, திடீரென்று தனது முடிவில்
போர்க் குற்ற விசாரணை: இலங்கை அதிபரின் முடிவில் திடீர் மாற்றம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுதியளித்திருந்த அதிபர் சிறீசேனா, திடீரென்று தனது முடிவில் பின்வாங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் சர்வதேச அளவிலான தலையீடு இல்லாமல், உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 37 ஆண்டுகளாக நடைபெற்ற போர், கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்தப் போரின் முடிவில், சுமார் 40,000 தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றொழித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பும், இலங்கை ராணுவமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, அந்த ஆணையம் குற்றம்சாட்டியது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டில், இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற மைத்ரிபால சிறீசேனா, இறுதிகட்ட போரின் போது ராணுவமும், விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 40-ஆவது கூட்டம், வரும் 22,23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே உறுதியளித்துள்ள சில திட்டங்களை இலங்கை அரசு நிறைவேற்றினாலும், மறுவாழ்வு பணிகள் மந்தமாக நடைபெறுவதாக தமிழர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பில் செய்தியாளர்களுக்கு சிறீசேனா புதன்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
போர் முடிந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் அமைதியை நிலைநாட்டியிருக்கிறோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்துக்கு எனது பிரதிநிகளை அனுப்பி வைக்க இருக்கிறேன். அங்கு, பழைய சம்பவங்களையும், காயங்களையும் மீண்டும் கிளர வேண்டாம் என்று ஐ.நா.வில் கேட்க இருக்கிறோம். 
எந்தவித தலையீடும் இல்லாமல் எங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காண இடைவெளி தேவைப்படுகிறது. இதை, மனித உரிமைகள் ஆணையத்தில் தெரிவிக்க இருக்கிறோம் என்றார்.
இதன் மூலம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த வாக்குறுதியில் இருந்து இலங்கை அரசு பின்வாங்குவதாகத் தெரிகிறது. 
இலங்கையில் அதிபர் சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே ஏற்பட்ட அதிகார மோதலால் ஏற்பட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்த பிறகு நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம், மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com