தயவு செய்து எங்களது தேர்தலில் தலையிடாதீர்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாகக் கூறினார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஒசாகா நகருக்கு வந்திருந்த இருவரும், தங்களது பேச்சுவார்த்தை திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, கடந்த 2016-ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான ராபர்ட் முல்லரின் விசாரணை குறித்து செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கேள்வியெழுப்பினர்.
ஒரு செய்தியாளர், 2020-இல் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தலையிட வேண்டாம் என்று புதினிடம் சொல்வீர்களா? என்று கேட்டார்.
அதனைக் கேட்ட டிரம்ப், உடனடியாக புதினிடம் நேரடியாக, தயவு செய்து தேர்தலில் தலையிடாதீர்களேன்! என்று நகைச்சுவையாகக் கூறினார். அதனைக் கேட்டு புதினும் புன்னகைத்தார்.
கடந்த 2016 அதிபர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக ரஷியா செயல்படவில்லை என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.