ஈரானை மிகக் குறுகிய காலத்தில் வென்றுவிடுவோம்: டொனால்ட் டிரம்ப்

ஈரானுடன் போர் ஏற்பட்டால் அந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வென்றிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானை மிகக் குறுகிய காலத்தில் வென்றுவிடுவோம்: டொனால்ட் டிரம்ப்


ஈரானுடன் போர் ஏற்பட்டால் அந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வென்றிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஃபாக்ஸ் பிஸினஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
ஈரானுடன் போர் ஏற்படாது என்றே நான் நம்புகிறேன்.
அப்படி ஒரு போர் ஏற்பட்டால், அமெரிக்கா எளிதில் வெற்றி பெற்றுவிடும்.
காரணம், ஈரானைவிட அமெரிக்கா மிகவும் வலிமை வாய்ந்தது; இந்தப் போரில் அமெரிக்காவின் நிலை மிக வலுவானதாக இருக்கும்.
எனவே, மிகக் குறுகிய காலத்தில் அந்தப் போர் நிறைவடைந்துவிடும்.
அதற்காக, அமெரிக்க ராணுவ வீரர்களை ஈரானுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்றார் டிரம்ப்.
வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது.
அதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை பிறகு  வாபஸ் பெற்றார்.
எனினும், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி,  வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் மற்றும் அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தத் தடைகள் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி சாடியிருந்தார்.
இந்தச் சூழலில், அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
முன்னதாக, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிப்பதாக சில நாள்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். அப்போது, நாம் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை (ஈரான் மீது) விதிக்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் நாம் (அமெரிக்கா) விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஈரான் மீது அமெரிக்காவுக்கு எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவர்கள் வளமான நாடாக இருக்க விரும்பினால் அதற்கு தடையில்லை. அதே நேரத்தில் அணுஆயுத பலத்தைக் காட்டுவோம் என்று ஈரான் ஆணவப்போக்கில் செயல்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
இது தவிர ஈரான் அணுஆயுதத் திட்டங்களை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது சைபர் (இணைய வழி) தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதல் மூலம் ஈரான் அணுஆயுதத் திட்டத்துக்கு பயன்படுத்தும் கணினிகளை அமெரிக்க ராணுவ இணையதள வல்லுநர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், அந்நாடு தொடர்ந்து அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள் மட்டுமல்லாது அந்நாட்டின் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவையும் முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com