மேற்கு ஆசியாவில் மேலும் 1,000 படையினர் குவிப்பு:அமெரிக்கா ஒப்புதல்

மேற்கு ஆசியாவுக்கு மேலும் 1,000 அமெரிக்கப் படையினரை அனுப்ப அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேற்கு ஆசியாவில் மேலும் 1,000 படையினர் குவிப்பு:அமெரிக்கா ஒப்புதல்


மேற்கு ஆசியாவுக்கு மேலும் 1,000 அமெரிக்கப் படையினரை அனுப்ப அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சர் பேட்ரிக் ஷனஹன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மேற்கு ஆசியப் பகுதியில் கூடுதலாக சுமார் 1,000 வீரர்களை அனுப்புவதற்கு நான் ஒப்புதல் வழங்கியுள்ளேன்.
அந்தப் பிராந்தியத்தில் செயல்படும் அமெரிக்கப் படையினர் கடல், வான் மற்றும் நிலப்பகுதிகளில் சந்திக்கக் கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த கூடுதல் வீரர்கள் அனுப்பப்படுகின்றனர்.
ஈரான் படைகள் மற்றும் அவர்களது ஆதரவு அமைப்புகளால் மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கப் படைகளுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அந்தப் பகுதியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய அண்மைக்காலத் தாக்குதல்கள், அந்த எச்சரிக்கையை மெய்ப்பிக்கின்றன.
உளவுத் தகவல்கள் மூலம் தெரிய வரும் அச்சுறுத்தல் நிலவரத்தின் அடிப்படையில், மேற்கு ஆசியப் பகுதிக்கான அமெரிக்க படைபலத்தில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் ஷனஹன் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடாமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை எனக் கூறி, அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு விலகினார்.
அதனைத் தொடர்ந்து, அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்தம் விதித்த கட்டுப்பாடுகளை மீறப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது.
அதன் தொடர்ச்சியாக, மேற்கு ஆசியப் பகுதிக்கு தங்களது விமானம் தாங்கிக் கப்பல்கள், தாக்குதல் போர்க் கப்பல்களை அமெரிக்கா கடந்த மாதம் அனுப்பியது. அந்தப் பகுதியில் ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அவை அனுப்பப்படுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓமன் வளைகுடா பகுதியில் கடந்த மாதமும், இந்த மாதமும் நடைபெற்ற சம்பவங்களில் சவூதி அரேபியா, நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்குதலுக்குள்ளாகின.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் கட்டுப்படுத்தும் அளவையும் மீறி அதிக விகிதத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈடுபடப்போவதாக ஈரான் திங்கள்கிழமை அறிவித்தது.
இதனால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சர் ஷனஹன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com