உலகம்

பயங்கரவாதிகளைவிட  ஆப்கன் படையினர் தாக்குதலில்தான் அதிக பொதுமக்கள் பலி: ஐ.நா. தகவல்

31st Jul 2019 12:53 AM

ADVERTISEMENT


நிகழாண்டில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைவிட, ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மற்றும் நேட்டோ படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளில்தான் அதிக பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா. பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2019-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 531 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
ஆனால், ஆப்கன் பாதுகாப்புப் படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் நடத்திய தாக்குதல்களில் 717 பேர் பலியாகினர்.
இவர்களில் 403 பேர் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் நடத்திய தாக்குதல்களில் 314 பேர் பலியாகினர்.
பெரும்பாலும் பொதுமக்களிடையே பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களும், இரவு நேரங்களில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களில் நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளின்போதும்தான் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த 531 பேரில் சுமார் 300 பேர், நேரடியாகக் குறிவைத்துத் தாக்கப்பட்டவர்கள். எஞ்சியவர்கள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில், பாதுகாப்புப் படையினர் மீதும், சிறுபான்மை ஷியா பிரிவினர் மீதும் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போரில் முக்கிய பங்கு வகித்து வரும் தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவுடன் வியத்நாம் தலைநகர் 
ஹனோயில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கன் படையினருடன் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐ.நா. அறிக்கை இவ்வாறு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT