உலகம்

இணையதளம் மூலம் ஊடுருவல்: 1.4 லட்சம் வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்கள் திருட்டு

31st Jul 2019 12:53 AM

ADVERTISEMENT


அமெரிக்க வங்கியொன்றின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் மூலம் ஊடுருவி, அந்த வங்கியின் 1.4 லட்சம் வாடிக்கையாளர்களது ரகசிய தகவல்களைத் திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாகத் திகழும் கேப்பிட்டல் ஒன், கடன் அட்டைகள், வாகனக் கடன்கள், சேமிப்புக் கணக்குகள் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறது.
அந்த வங்கியின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில், பெய்ஜே ஏ. தாம்ஸன் என்பவர் இணையதளம் மூலம் ஊடுருவி, அதிலிருந்த தகவல்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அந்த ஊடுருவல் மூலம், 1.4 லட்சம் வாடிக்கையாளர்கள் வங்கியிடம் கடன் வேண்டி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி இருப்புத் தொகை, கடன் மதிப்பீடு, தேசிய அடையாள அட்டையான சமூகப் பாதுகாப்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவரத்தை இணையதளக் குற்றப் புலனாய்வு நிபுணர்கள் மூலம் கண்டறிந்த தேசிய புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ.), தாம்ஸனின் இல்லத்தில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தியது.
அப்போது நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் கேப்பிட்டல் ஒன் வங்கியின் தகவல் சேமிப்பகத்தில் அவர் ஊடுருவியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து,  தாம்ஸனைக் கைது செய்த அதிகாரிகள், சியாட்டில் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது தகவல் தொழில்நுட்பக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT