பிரேசிலில் உள்ள சிறையில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 52 கைதிகள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, பாரா மாகாண அரசின் சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அல்டமிரா பகுதியிலுள்ள சிறையில் இரு கோஷ்டியினருக்கு இடையே திங்கள்கிழமை காலையில் மோதல் மூண்டது. இதையடுத்து, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். மேலும், சிறை வளாகத்தின் பல பகுதிகளில் தீ வைத்தனர். மதியம் வரை நீடித்த வன்முறையில் 52 கைதிகள் உயிரிழந்தனர். அவர்களில் 16 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். வன்முறையின்போது, இரு அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்றார் அவர்.
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கைதிகள் உள்ள நாடாக பிரேசில் உள்ளது. கடந்த 2016, ஜூன் நிலவரப்படி, அங்குள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 7.2 லட்சமாகும். இதனால், அந்நாட்டின் சிறைகள் நிரம்பி வழிகின்றன. சிறைகளில் அடிக்கடி கலவரங்களும் நிகழ்கின்றன.