உலகம்

பெனின் நாட்டில் ராம்நாத் கோவிந்த்

29th Jul 2019 02:02 AM

ADVERTISEMENT

 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலாவதாக பெனின் நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். இதன் மூலம் பெனினுக்கு வரும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

பெனின் நாட்டின் கோடோனோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்லியன் அக்பெனோசி வரவேற்றதாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெனின் அதிபர் பேட்ரிஸ் டலோனை, ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவிருக்கிறார். மேலும், அந்நாட்டின் நாடாளுமன்றத்திலும் அவர் உரை நிகழ்த்த உள்ளார். கோடோனோவில் செவ்வாய்க்கிழமை இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் அவர், பின்னர், காம்பியாவுக்கு புறப்பட்டு செல்கிறார். காம்பியா பயணத்தை முடித்த பின், கினியாவுக்கு ராம்நாத் கோவிந்த் செல்கிறார்.

ADVERTISEMENT

இப்பயணத்தின் மூலம் காம்பியா, கினியா நாடுகளுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கவிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் இந்த பயணத்தின்போது, மேற்கண்ட மூன்று நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் புதிய திசையை நோக்கி பயணிக்கும் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 20 வெளிநாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த்  அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் நிறைவடையும்போது, அந்த எண்ணிக்கை 23-ஆக அதிகரிக்கும். ஆப்பிரிக்க கண்டத்துக்கு அவர் பயணம் மேற்கொள்வது இது 4-ஆவது முறை என்று குடியரசுத் தலைவருக்கான ஊடக செயலர் அசோக் மாலிக் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT