உலகம்

பால்ட்டிமோர் நகரம் குறித்த டிரம்ப் கருத்தால் சர்ச்சை

29th Jul 2019 01:06 AM

ADVERTISEMENT

 

கருப்பின மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகர் குறித்து அதிபர் டிரம்ப் கூறிய கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோர் தொகுதி ஜனநாயகக் கட்சி எம்.பி.யான எலிஜா கமிங்ஸ், அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருபவர். கருப்பினத்தைச் சேர்ந்த அவர், அரசு செயல்பாடுகள் குறித்த விசாரணை மேற்கொள்ளும் பிரதிநிதிகள் சபைக் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். டிரம்ப் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், எலிஜா கமிங்ஸ் பிரதிநிதித்துவம் வகிக்கும் பால்ட்டிமோர் பகுதியை கடுமையாக விமர்சித்து அதிபர் டிரம்ப் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் பதிவுகள் இட்டுள்ளார்.

ADVERTISEMENT

அந்த நகரம் அமெரிக்காவிலேயே மிகவும் மோசமான தலைமையில் இயங்கி வருவதாகவும், மிகவும் அபாயகரமான பகுதி எனவும் அந்தப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், எலிகள் நிறைந்த, அருவருப்பை ஏற்படுத்தும் பகுதி என்றும் பால்ட்டிமோர் நகரை டிரம்ப் விமர்சித்துள்ளார். 

கருப்பின மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நகரை அதிபர் டிரம்ப் இவ்வாறு விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவரது இந்தக் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே, டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கையை கடுமையாக விமர்சித்து வந்த ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கார்டெஸ், இல்ஹன் ஒமர், ரஷிதா லாயிப், அயான்னா ப்ரெஸ்லி ஆகிய 4 பேரும் அமெரிக்காவை விட்டு வெளியேறலாம் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். வெள்ளை இனத்தைச் சேராத, பெண் எம்.பி.க்களான அந்த 4 பேர் குறித்து டிரம்ப் இவ்வாறு கூறியது இனவாதக் கருத்து என்று சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், பால்ட்டிமோர் குறித்து டிரம்ப் தற்போது தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT