அமெரிக்க அரசு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் நிறுத்திவைத்துள்ள மரண தண்டனை நிறைவேற்றங்களை மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து கைதிகளுக்கு விஷ ஊசி முலம் அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதியை அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சில மாகாண அரசுகள், தங்களது சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அந்த
தண்டனையை நிறைவேற்றி வந்தாலும், தேசிய சட்டத்தின்கீழ் அத்தகைய தண்டனையை நிறைவேற்றுவது சுமார் 20 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கைதிகளுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் தொடர அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மிகவும் மோசமான குற்றங்களுக்காக தேசிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேர் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு அந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசை கோரினோம்.
அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.