அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள ஆயத்தமாகி வரும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையிலேயே வியாழக்கிழமை ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிநவீன ஏவுகணைகளின் சோதனையை அதிபர் கிம் ஜோங்-உன் நேரில் பார்வையிட்டார்.
அந்த சோதனையின்போது ஏவுகணைகளின் செயல்பாடு குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.
தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே அந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
எங்களிடம் அமைதி குறித்து பேசும் தென் கொரியா, அதற்கு நேர்மாறாக அதிநவீன தாக்குதல் ஆயுதங்களைத் தருவித்து வருகிறது.
மேலும், எங்களின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அந்த நாடு செய்து வருகிறது.
ஏவுகணை சோதனை மூலம் அந்த நாட்டுக்கு நாங்கள் விடுத்துள்ள எச்சரிக்கையை அலட்சியப்படுத்தும் தவறை தென் கொரியா செய்துவிடக் கூடாது என்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வட கொரியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான வான்சானிலிருந்து இரண்டு ஏவுகணைகள் வியாழக்கிழமை ஏவி சோதிக்கப்பட்டதாக தென் கொரிய ராணுவ கூட்டுத் தலைமையகம் தெரிவித்தது.
புதிய ரகத்தைச் சேர்ந்த அந்த இரு ஏவுகணைகளில் ஒன்று 430 கி.மீ. தொலைவுக்கும், மற்றொரு ஏவுகணை 690 கி.மீ. வரையும் பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு கொரிய நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் கடந்த மாத இறுதியில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
எனினும், வட கொரியாவின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக்காவும், தென் கொரியாவும் மீண்டும் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் வட கொரியா தனது இரு ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப்பார்த்தது.