உலகம்

இருட்டடிப்பு குற்றச்சாட்டு: கூகுளிடம் ரூ.344 கோடி இழப்பீடு கோரி துளசி கபார்ட் வழக்கு

27th Jul 2019 12:59 AM

ADVERTISEMENT


அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது பிரசாரத்தை இருட்டடிப்பு செய்தமைக்காக,  பிரபல கூகுள் தேடுதல் வலைதள நிறுவனம் தமக்கு 5 கோடி டாலர் (சுமார் ரூ.344 கோடி) இழப்பீடு தர வேண்டும் என்று அந்த நாட்டு எம்.பி. துளசி கபார்ட் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஹவாய் மாகாணத்தின் 2ஆவது நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான துளசி கபார்ட், முன்னாள் ராணுவ வீராங்கனை ஆவார்.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் எம்.பி.யான அவர், சமோவா தீவுகளைப் பூர்விகமாகக் கொண்டவர். வரும் 2020-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களிடையே கடந்த ஜூன் மாதம் விவாதம் நடைபெற்ற நிலையில், கூகுள் வலைளத்தில் துளசி கபார்ட்டின் பிரசார விளம்பரக் கணக்கை ஜூன் 27 முதல் 28-ஆம் தேதி வரை அந்த வலைதள நிறுவனம் முடக்கிவைத்ததாக அவரது பிரசார அலுவலகம் குற்றம் சாட்டியது.
கூகுளின் இந்த நடவடிக்கையால் துளசி கபார்ட்டின் பிரசாரம் இருட்டடிப்புக்குள்ளானதாகவும், இது 2020-ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் அந்த நிறுவனத்தால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுவதாகவும் அந்த அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விளம்பரக் கணக்கை முடக்கிவைத்ததன் மூலம் தமக்கு இழப்பை ஏற்படுத்தியமைக்கு ஈடாக கூகுள் நிறுவனம் 5 கோடி டாலர் தர வேண்டும் என்று துளசி கபார்ட் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
கூகுளின் நடவடிக்கை, பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்று துளசி கபார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT