பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை விடுவிக்க ஈரான் மறுப்பு

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிறைபிடிக்கப்பட்ட தங்களது எண்ணெய்க் கப்பலை உடனடியாக விடுக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில், 'ஸ்டெனா இம்பெரோ'வை சிறைபிடிப்பதற்காக அதில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கும் ஈரான் வீரர்கள்.
ஈரான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில், 'ஸ்டெனா இம்பெரோ'வை சிறைபிடிப்பதற்காக அதில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கும் ஈரான் வீரர்கள்.

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிறைபிடிக்கப்பட்ட தங்களது எண்ணெய்க் கப்பலை உடனடியாக விடுக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாண துறைமுக மற்றும் கடலோரக் காவல் அமைப்பின் பொது இயக்குநர் அல்லா-முராத் அஃபிஃபிபூர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எங்களது மீன்பிடி படகு மீது பிரிட்டனின் "ஸ்டெனா இம்பெரோ' கப்பல் மோதிய விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரை, அந்தக் கப்பலை விடுவிக்க முடியாது. அந்த விசாரணை எவ்வளவு விரைவில் முடிவடைகிறதோ, அவ்வளவு விரைவில் அந்தக் கப்பல் விடுவிக்கப்படும்.
தற்போது அந்தக் கப்பல் பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சப்பட்டுள்ளது. கப்பல் பணியாளர்கள் அனைவரும் அதில் நலமுடன் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
அந்தக் கப்பல் விடுவிக்கப்படுவது, விபத்து குறித்த விசாரணைக்கு அதன் பணியாளர்கள் அளிக்கும் ஒத்துழைப்பையும், அதுதொடர்பாக எங்களுக்குத் தேவைப்படும் ஆதாரங்கள் கிடைப்பதையும் பொருத்தது ஆகும்.இந்த விசாரணையை கூடிய விரைவில் நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, "கிரேஸ் 1' என்ற ஈரான் எண்ணெய்க் கப்பலை ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரிட்டன் இந்த மாதம் 4-ஆம் தேதி சிறைபிடித்தது.
இதனால் பிரிட்டனுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தங்களது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, அதே ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான "ஸ்டெனா இம்பெரோ'வை ஈரான் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தது.
இது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் தங்களது எண்ணெய்க் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட் சனிக்கிழமை வலியுறுத்தினார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com