ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அந்த மாகாண கவுன்சில் உறுப்பினர் யூசுப் யூனுஸி கூறுகையில், காந்தஹார் மாகாணத்தின் காக்ரெஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தொழுகைக்காக லாரியில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த லாரி, சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறியது.
இந்த குண்டுவெடிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள். தலிபான் பயங்கரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம்' என்று குற்றம்சாட்டினார்.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி கடந்த சில ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி, அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் மீதும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சாலைகளில் வெடிகுண்டுகளை தலிபான் பயங்கரவாதிகள் புதைத்து வைப்பது அந்நாட்டில் வழக்கமான ஒன்றாகும்.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தலிபான் பயங்கரவாத அமைப்பு மீது அரசு குற்றம்சாட்டியுள்ளது.