இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வியாழக்கிழமை தோல்வியடைந்தது.
இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வியாழக்கிழமை தோல்வியடைந்தது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிராக, ஜனதா விமுக்தி பெருமுன (ஜேவிபி) எனும் இடதுசாரி கட்சி, 12 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
அதில்,  இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் இருந்து முன்கூட்டியே உளவுத்தகவல்கள் கிடைத்தபோதிலும், அந்தத் தாக்குதலைத் தடுப்பதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது. எனவே, இந்த அரசு பதவியில் நீடிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாள்களாக விவாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, தீர்மானத்தை தாக்கல் செய்த பிறகு, ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயக கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக, ரணில் விக்கிரமசிங்க அரசு, மக்களைப் பாதுகாப்பதற்குத் தவறி விட்டது. எனவே, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் அதிபர் ராஜபட்ச தலைமையிலான எதிர்க்கட்சி தெரிவித்தது. இதுகுறித்து ராஜபட்சவின் ஆதரவாளர்களில் ஒருவரான வாசுதேவ நாணயக்காரா கூறுகையில், ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்தது விவேகமற்ற செயல் என்பதை ஜேவிபி உணர்ந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இருப்பினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். முந்தைய ராஜபட்ச தலைமையிலான அரசைக் காட்டிலும், விக்கிரமசிங்க அரசு மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com