உலகம்

பாகிஸ்தானில் ரயில்கள் மோதல்: 21 பேர் பலி

12th Jul 2019 01:08 AM

ADVERTISEMENT


பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்; 80 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
லாகூரிலிருந்து குவெட்டா நகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த அக்பர் விரைவு ரயில், சாதிக்பாத் பகுதியில் உள்ள வர்ஹார் ரயில் நிலையம் வழியாகச் சென்றது.
அப்போது, அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது அந்த ரயில் பயங்கரமாக மோதியது.
ரயில் நிலையத்தில் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பக்க இணைப்புப் பாதையில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அக்பர் விரைவு ரயில் முக்கியப் பாதை வழியாக செல்லாமல் எதிர்பாராவிதமாக சரக்கு ரயில் நின்றிருந்த பக்க இணைப்புப் பாதைக்கு திசைமாறியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
சரக்கு ரயிலுடன் மோதியதில் பயணிகள் ரயிலின் என்ஜின் முற்றிலுமாக உருக்குலைந்தது.
மேலும், அந்த ரயிலின் 3 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்; 80-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
சேதமடைந்த பெட்டியில் இருந்து ஒரு குழந்தை உள்பட இருவர் மீட்கப்பட்டனர்.
மேலும், கனரக இயந்திரங்களின் உதவியுடன் விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சாதிக்பாத் மற்றும் ரஹீம் யார் கான் நகரிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.15 லட்சம் இழப்பீடு: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் (பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில்) இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக பாகிஸ்தானின் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துமாறு ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT