வெனிசூலா போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 7,000 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிஷெல் பாஷெலே தெரிவித்துள்ளார்.
அரசியல் பதற்றம் நிலவி வரும் அந்த நாட்டுக்கு அண்மையில் நேரில் சென்று ஆய்வு நடத்திய பாஷெலேட், அதுதொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், அதிபர் மடூரோவுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சுமார் 7,000 பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையை தாக்கல் செய்து அவர் பேசும்போது, வெனிசூலாவின் முக்கிய அதிகார அமைப்புகளும், நீதியின் ஆட்சியும் அழிக்கப்பட்டுவிட்டதாக கவலை தெரிவித்தார்.