உலகம்

கண்ணீருடன் வரவேற்றனர் வட கொரிய மக்கள்: டிரம்ப் உருக்கம்

2nd Jul 2019 12:48 AM

ADVERTISEMENT


வடகொரியாவில் தான் காலடி எடுத்து வைத்தபோது அந்நாட்டைச் சேர்ந்த பலர் உண்மையில் அழுதுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜோங் -உன்னை சந்தித்த பிறகு தென்கொரியாவுக்கு சென்ற அதிபர் டிரம்ப் அங்குள்ள ஓஸன் விமானப் படைத் தளத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  
வடகொரியாவில் நான் காலடி எடுத்து வைத்தது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். வடகொரியா எல்லைக்குள் நுழைந்தபோது கொரிய மக்களின் கண்களில் உண்மையில் நீர் வழிவதைக் கண்டேன். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம் என்றார்.
அமெரிக்க அதிபருடனான சந்திப்பதை வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் என வடகொரியாவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்ஸி கூறியுள்ளதாவது:
ராணுவம் விலக்கி கொள்ளப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சந்தித்துக் கொண்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்பதுடன் அற்புதமான, ஆச்சரியமான நிகழ்வாகும். இருவரும் ஆக்கப்பூர்மான வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அதிபர் டிரம்ப், அங்கிருந்து தென் கொரியாவுக்குப் புறப்பட்டார். அதற்கு முன்னதாக, தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவம் விலக்கப்பட்ட எல்லை கிராமமான பான்முன்ஜோமில் தம்மை சந்திக்க வருமாறு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு சுட்டுரை (டுவிட்டர்) வலைதளம் மூலமாக டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
யாரும் எதிர்பாராத வகையில் விடுக்கப்பட்ட அந்த அழைப்பை ஏற்று, எல்லைப் பகுதியில் டிரம்பை சந்திக்க கிம் ஜோங்-உன் ஒப்புக்கொண்டார். அதையடுத்து பான்முன்ஜோம் எல்லை கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அதிபர் டிரம்ப்பை, எல்லைக்கு அப்பால் வட கொரிய பகுதியிலிருந்து கிம் ஜோங்-உன் வரவேற்றார். பிறகு எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரிய பகுதிக்கு டிரம்ப் சென்றார்.
வட கொரிய பகுதிக்கு அமெரிக்க அதிபர் ஒருவர் செல்வது வரலாற்றில் அதுவே முதல் முறை.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT