இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிடும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா திங்கள்கிழமை கூறினார்.
இதுகுறித்து, கொழும்பில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் சிறீசேனா கூறியதாவது:
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தூக்கிலிடும் உத்தரவில் கடந்த வாரம் நான் கையெழுத்திட்ட பிறகு, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, குற்றவாளிகளை தூக்கிலிடும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நான், எனது நாட்டை போதைப் பொருளிடம் இருந்து பாதுகாக்க விரும்புகிறேன். எனவே போதைப் பொருளை கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள விடுங்கள் என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தேன்.
மரண தண்டனை உத்தரவை திரும்பப் பெறவில்லை என்றால், இலங்கைக்கு வரிச்சலுகை ரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய யூனியன் அச்சுறுத்துகிறது.
ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கை இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும். இதை ஏற்க முடியாது என்று சிறீசேனா கூறினார். மரண தண்டனையை நிறைவேற்றும் தனது முடிவை விமர்சித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசு சாரா அமைப்புகளையும் அதிபர் சிறீசேனா கடுமையாகச் சாடினார்.
இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனையை அமல்படுத்தும் சிறீசேனாவின் முடிவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.