செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி: பிரெக்ஸிட் மசோதா தோல்வியால் ஏற்பட்டநெருக்கடி நீங்கியது 

DIN | Published: 17th January 2019 04:06 AM
பிரதமர் தெரசா மே-வுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புதன்கிழமை கொண்டு வரும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின்.


பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. 
இதனால் தெரசா ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கியது. முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், மிகப் பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு குறித்து இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய யூனியனின் பல அமைப்புகளின் தலைமைச் செயலகங்கள் பிரிட்டனில் இயங்கி வந்தன. மேலும் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்குள் ஒருங்கிணைந்த வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதால், உறுப்பு நாடுகளிடையே வர்த்தக நெறிமுறைகள், வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் தெரசா மே பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தினார். இதற்கு பிரிட்டன் எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினர் இடையேயும் எதிர்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நீண்ட சர்ச்சைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, அந்த மசோதாவுக்கான ஒப்புதலை பிரதமர் தெரசா மே நாடாளுமன்றத்தில் கோரினார்.
மசோதா மீது நாடாளுமன்றத்தில் காரசார விவாதத்தையடுத்து, வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒப்பந்தத்தை எதிர்த்து 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 எம்.பி.க்களும் வாக்களித்தனர். அதையடுத்து, 230 வாக்குகள் வித்தியாசத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வியடைந்தது.
பிரிட்டனின் நவீன கால வரலாற்றில், அந்த நாட்டுப் பிரதமர் ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் இவ்வளவு பெரிய தோல்வி கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா தீர்மானம்: அரசு
அறிமுகம் செய்த மசோதா தோல்வி அடைந்ததையடுத்து, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் உடனடியாகக் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது சுமார் 6 மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மே அரசு வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு எதிராக 325 வாக்குகளும், ஆதரவாக 306 வாக்குகளும் பதிவாகின. முன்னதாக, அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொழிலாளர் கட்சித் தலைவரான ஜெரிமி கோர்பின் தொடங்கி வைத்துப் பேசினார். உயிரற்ற ஜடமாகிவிட்ட அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, தெரசா மே அமைச்சரவையைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்தச் சூழலில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அது தோல்வியடைந்துள்ளது.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திடீர் மழை வெள்ளம்: 23 பேர் பலி
பாகிஸ்தான்: ஹபீஸ் சயீதுக்கு  இடைக்கால ஜாமீன்
27 ஆண்டுகள் காணாத பின்னடைவு...சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக சரிவு
வெள்ள பாதிப்பு பகுதிகளில் சுகாதாரப் பணிகள்: சர்வதேச அமைப்புகளிடம் உதவி கோரியது நேபாளம்