நிலவில் ஆய்வு: விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரேலின் தனியார் விண்கலம்

நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக தனியார் அமைப்பால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் விண்கலம், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவில் ஆய்வு: விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரேலின் தனியார் விண்கலம்


நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக தனியார் அமைப்பால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் விண்கலம், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இது நிலவில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் முதல் இஸ்ரேலிய விண்கலம் என்பதுடன், அத்தகைய ஆய்வில் ஈடுபடுத்தப்படவிருக்கும் முதல் தனியார் விண்கலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
1960-கள் மற்றும் 70-களுக்குப் பிறகு நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆர்வம் உலக நாடுகளிடையே மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட பெரஷீத் என்ற விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து  வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.
585 கிலோ எடையுடைய அந்த விண்கலம், அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி இரவு 8.45 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஹீப்ரு மொழியில் தோற்றம் என்ற பொருள் தரும் பெயரைக் கொண்ட பெரஷீத் விண்கலம், இஸ்ரேலின் ஸ்பேஸ்-ஐஎல் என்ற லாப நோக்கற்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். தனியார் தொழிலதிபர்கள் அளித்த நிதியை மட்டும் கொண்டு அந்த விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட முதல் இஸ்ரேலிய விண்கலம் என்பதுடன், அத்தகைய ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையையும் பெரஷீத் பெறுகிறது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் ஸ்பேஸ்-ஐஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 
முதல் முறையாக இஸ்ரேல் நிலவைத் தொடப் போகிறது. அனைவரும் கண்டு களியுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் பெரஷீத் விண்கலம் புவியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பொருத்தப்பட்ட என்ஜின் மூலம் தற்போது அது தற்போது இஸ்ரேலில் இருந்து இயக்கப்படுகிறது.
அந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதை இஸ்ரேல் விண்வெளி ஆய்வு அமைப்பின் பொறியாளர்களுடன் அமர்ந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாகப் பார்வையிட்டார்.
தற்போது பூமியை வலம் வந்து கொண்டிருக்கும் பெரஷீத் விண்கலம், 7 வார கால இயக்கத்துப்  பிறகு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சந்திரயான்-1 போன்று நிலவில் விழுந்துஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்கலன்கள் போலன்றி, பெரஷீத் விண்கலம் பத்திரமாகத் தரையிறங்கவுள்ளது.
இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் தங்களது ஆய்வுக் கலன்களை பத்திரமாகத் தரையிறக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பெரஷீத் திட்டம் வெற்றியடைந்தால், அந்தப் பட்டியலில் இஸ்ரேலும் இணையும்.
ஆளில்லாமல் இயங்கவிருக்கும் அதன் ஆய்வுக் கலத்தில் நிலவின் காந்தப் புலன்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, நிலவின் தோற்றம் குறித்து தெரிந்து கொள்ள உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com