சிரியாவில் அமைதிக்காக 200 வீரர்கள்: அமெரிக்கா

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 200 வீரர்கள் அங்கேயே நீடிப்பார்கள் என்று அமெரிக்க
சிரியாவின் மன்பிஜ் நகரில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் (கோப்புப் படம்).
சிரியாவின் மன்பிஜ் நகரில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் (கோப்புப் படம்).


உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 200 வீரர்கள் அங்கேயே நீடிப்பார்கள் என்று அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. முன்னதாக, சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் முழுவதுமாக திரும்பப் பெறப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் டிரம்பின் முடிவில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் குறிப்பிட்ட சில காலத்துக்கு அமெரிக்க வீரர்கள் 200 பேர் தங்கியிருப்பார்கள். துருக்கி அதிபர் ரீகேப் தாயீப் எர்டோகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இரு தலைவரும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைத்துவிட்டதாகவும், ஆகவே, சிரியாவில் உள்ள 2,000 அமெரிக்க வீரர்கள் திரும்பப் பெறப்படுகின்றனர் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
சிரியாவில் இருந்து வீரர்களை விரைவாகவும், முழுமையாகவும் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கை நிறைவுபெறும் என்று கூறப்பட்டது.
அதிபர் டிரம்ப்பின் இந்த திடீர் அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்தன. அமெரிக்க வீரர்களை திரும்பப் பெறுவதால், போரில் ஐ.எஸ். படைகளை தோற்கடிப்பதற்கு உறுதுணையாக இருந்த சிரியா ஜனநாயக போராளிகள், குர்தீஷ் போராளிகள் போன்றோருக்கு துருக்கியிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்படும் என்ற எச்சரிக்கை குரல்கள் ஒலித்தன. குறிப்பாக, டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் பதவி விலகினார். 
இந்நிலையில், அமெரிக்க அதிபரும், துருக்கி அதிபரும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியபோது, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சிரியாவில் நிலவும் தற்போதைய சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சிரியா விவகாரத்தைப் பொருத்தவரையில், மிகுந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்குதற்கான ஒத்துழைப்பை தொடருவது என இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com