ஐ.நா. கண்டன அறிக்கையை தாமதப்படுத்திய சீனா

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையில் அந்தத் தாக்குதலை பயங்கரவாதம் எனக் குறிப்பிடுவதற்கு


 புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையில் அந்தத் தாக்குதலை பயங்கரவாதம் எனக் குறிப்பிடுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவேதான் புல்வாமா தாக்குதல் குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கை ஒருவார காலம் தாமதமாகியுள்ளது என்ற விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட மறுநாளே அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட ஐ.நா. பாதுகாப்பு  கவுன்சில் முடிவு செய்தது. 
எனினும், அந்த கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா, அந்த அறிக்கை வெளியாவதைத் தாமதப்படுத்த தீவிர முயற்சி செய்தது. கண்டன அறிக்கை வெளியீட்டை கடந்த 18-ஆம் தேதி வரை தள்ளிவைக்க வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டது.
மேலும், புல்வாமா தாக்குதலை மிகக் கடுமையாகக் கண்டிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நோக்கத்தை மழுங்கடிக்கும் வகையில், அறிக்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியது. அறிக்கையில் புல்வாமா தாக்குதல் பயங்கரவாதம் எனக் குறிப்பிடப்படுவதையும் சீனா எதிர்த்தது.
இவ்வாறு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்ததால்தான் கண்டன அறிக்கையை வெளியிடுவது ஒரு வாரம் தள்ளிப் போனது. இதற்கிடையே, புல்வாமா தாக்குதலுக்கு எதிரான கண்டன அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிடுவதைத் தடுப்பதற்காக பாகிஸ்தானும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
எனினும், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் அந்த கண்டன அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com