மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சவூதி அரேபியா


பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சவூதி அரேபியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு நிதியமைச்சர் அதீல் பின் அஹமது அல்-ஜுபிரி கூறியுள்ளார்.
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முதலில் இந்தியாவும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் தனித்தனியாக முயற்சி செய்தன. எனினும், கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முயற்சிகளைத் தடுத்து வருகிறது. இந்தியாவுக்கு வரும் முன்பு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டார். இதன் மூலம் சீனாவைப் போல சவூதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று செய்தி வெளியானது.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை பேட்டியளித்த சவூதி அரேபிய நிதியமைச்சர் அல்-ஜுபிரி கூறியதாவது:
பயங்கரவாத செயலில் யார் ஈடுபட்டாலும் அவர் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் இணைந்து சவூதி அரேபியா வெளியிட்ட கூட்டறிக்கையை ஒரு நபருடன் (மசூத் அஸார்) தொடர்புபடுத்தி சிலர் பார்க்கின்றனர். அது தவறானது. 
பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எங்கள் நாடு உறுதியாக உள்ளது. ஐ.நா. மூலம் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை சவூதி அரேபியா எதிர்க்கவில்லை என்றார் அல் ஜுபிரி.
850 இந்திய கைதிகளுக்கு விடுதலை: சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் இந்தியப் பயணத்தையொட்டி அந்நாட்டு சிறைகளில் உள்ள 850 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இளவரசர் தன்னை சந்தித்தபோது பிரதமர் மோடி இது தொடர்பாக அவரிடம் கோரிக்கை விடுத்தார். 
இதையடுத்து, இந்த நடவடிக்கையை சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com