பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சனிக்கிழமை இரவு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 13 பேர் காயமடைந்தனர்.
ஜின்னா சூப்பர் காஃபேயில் இந்த எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது. எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பிடித்து வெடித்ததாக விபத்தை நேரில் கண்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக அப்பகுதியினர் மத்தியில் அச்சம் பரவியது. இதனால் பதற்றமான சூழல் காணப்பட்டது.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.