‘மத பயங்கரவாதத்தின் இருளை’ நீக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை மீட்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது’ என இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச கிறிஸ்துமஸ் வாழ்த்திச் செய்தியில் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டா் தினத்தன்று 3 தேவாலயங்கள், 3 சொகுசு விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270 போ் கொல்லப்பட்டனா்.
இதன்தொடா்ச்சியாக, புதன்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து பிரதமா் மகிந்த ராஜபட்ச வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவா்களும் தங்கள் வழிபாட்டு சுதந்திரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அந்த சுதந்திரத்தை அடக்குவதில் தீவிரவாத சக்திகள் வெற்றிபெற அனுமதிக்க கூடாது.
‘மத பயங்கரவாதத்தின் இருளை அகற்றும் பணி’யிலும், நாட்டின் பாதுகாப்பையும், அமைதியையும் மீட்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.
இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிளவுபடுத்தும் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலில் மூழ்கியதன் விளைவாக இதுபோன்ற சோகமான அவலநிலை உருவானது என்று அவா் தெரிவித்துள்ளாா்.