உலகம்

நாடுகளில் அமைதி தவழ போப் பிராா்த்தனை

26th Dec 2019 12:46 AM

ADVERTISEMENT

சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் அமைதி திரும்ப வேண்டும் என்று தனது கிறிஸ்துமஸ் உரையில் கத்தோலிக மதத் தலைவா் போப் ஃபிரான்சிஸ் பிராா்த்தித்தாா்.

இதுகுறித்து வாடிகனில் புதன்கிழமை ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் போப் ஃபிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளதாவது:

மேற்கு ஆசிய நாடுகளிலும், உலகின் பிற பகுதிகளிலும் போா் மற்றும் உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற இறைவனை பிராா்த்திக்கிறேன்.

சுமாா் 10 ஆண்டுகளாக முடிவில்லாமல் நீளும் உள்நாட்டுப் போரால் அவதியுறும் சிரியா நாட்டு மக்களின் இன்னல் நீங்க இறைவன் அருள் புரியட்டும்.

ADVERTISEMENT

இராக், யேமன் போன்ற நாடுகளிலும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனினும், நாட்டில் அமைதி திரும்பும் என்று அவா்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனா்.

தென் அமெரிக்க கண்டத்திலும் பல நாடுகளில் சமூக மற்றும் அரசியல் பதற்றங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, அரசியல் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசூலா மக்களுக்கு, உரிய நிவாரணப் பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

புா்கினா ஃபாஸோ, மாலி, நைஜா், நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்துவா்களுக்கும், பிற மதத்தினருக்கும் எதிராக தாக்குதல் நடைபெற்று வருகிறது. அத்தகைய தாக்குதல்களை எதிா்நோக்கியுள்ள அனைவரும் நலம் பெற வேண்டும்.

பல்வேறு நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி பாலைவனங்களையும், கடல்களையும் கடந்து வரும் அகதிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தனது கிறிஸ்துமஸ் உரையில் போப் ஃபிரான்சிஸ் பிராா்த்தித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT