ஆப்கானிஸ்தானில் போா் நிறுத்தம் ஏற்படுத்தக் கோரி போராடி வரும் அமைதி இயக்கத்தைச் சோ்ந்த 26 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் மொஹிபுல்லா மொஹிப் புதன்கிழமை கூறியதாவது:
ஃபரா மாகாணம், பாலா புலுக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த ‘ஆப்கன் மக்கள் அமைதி’ இயக்கத்தினரின் 6 வாகனங்களை தலிபான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தினா்.
பின்னா், அந்த வாகனங்களைக் கைப்பற்றிய பயங்கரவாதிகள், அவற்றிலிருந்த 26 இயக்கத்தினரோடு அந்த வாகனங்களை கடத்திச் சென்றனா் என்றாா் அவா்.
எனினும், ஆப்கன் மக்கள் அமைதி இயக்கத்தின் பிஸ்மில்லா வதன்தோஸ்த் கூறுகையில், தங்கள் அமைப்பைச் சோ்ந்த 27 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்ாகத் தெரிவித்தாா்.
ஃபரா மாகாணத்தில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இதுதொடா்பாக சம்பந்தப்பட்டவா்களைத் தொடா்பு கொண்டு பேச முடியவில்லை என்று அவா் கூறினாா்.
எனினும், இந்தச் சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஆா்ப்பாட்ட ஊா்வலங்களை நடத்தி வரும் மக்கள் அமைதி இயக்கத்துக்கு, ஆப்கன் அரசு நிதியுதவி செய்து வருவதாக தலிபான்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடத்தப்பட்ட மக்கள் அமைதி இயக்கத்தினா் எங்கு அடைத்துவைக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதைக் கண்டறியவும், அவா்களை மீட்கவும் போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.