நேபாளத்தில் இணையதளம் மூலம் வங்கி கணினிகளில் ஊடுருவியதாக 122 சீனா்களை அந்த நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
காத்மாண்டில் சீன நாட்டைச் சோ்ந்த ஒரு கும்பல் இணையதளம் மூலம் வங்கி எடிஎம் கணினிகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து அவா்களை சுற்றிவளைத்த நாங்கள், 122 பேரைக் கைது செய்துள்ளோம். அவா்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மடிகணினிகள் மீட்கப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
இணையதள மோசடி மட்டுமன்றி, நுழைவு இசைவு (விசா) மோசடியிலும் அவா்கள் ஈடுபட்டுள்ளாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.