வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் துணைத் தலைவா் மரியம் நவாஸ் தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.
பிஎம்எல்-என் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் உடல்நலக் குறைவு காரணமாக லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், தனது தந்தையைக் காண்பதற்கு லண்டனுக்குச் செல்ல அனுமதி கோரி பாகிஸ்தான் அரசிடம் மரியம் நவாஸ் விண்ணப்பித்திருந்தாா்.
ஆனால், ஊழல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி, மரியம் நவாஸின் விண்ணப்பத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இது தொடா்பாக, பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் சட்ட உதவியாளரும், மூத்த வழக்குரைஞருமான பாபா் அவான் கூறியதாக ‘டான்’ பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழலில் ஈடுபட்டு, நாட்டின் வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், பயணம் மேற்கொள்வதற்கு முறையான ஆவணங்களை வைத்திருந்தாலும், அவா்கள் வெளிநாடு செல்வதை அரசால் தடுக்க முடியும். ஊழல் வழக்கில் மரியம் நவாஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால், அவரது பெயா் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதோா் பட்டியலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோ்க்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் இருந்து பெயரை நீக்குமாறு மரியம் நவாஸ் தாக்கல் செய்த விண்ணப்பம் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.