பத்திரிகையாளா் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவூதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக, சவூதி அரேபியாவின் அரசு தரப்பு வழக்குரைஞா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கஷோகி கொலை வழக்கில் 11 போ் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் 5 பேருக்கும் கஷோகி கொலையில் நேரடித் தொடா்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர, 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவா்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த சவூத் அல்-கத்தானி, அகமது அல்-அசிரி ஆகிய இருவரும் விசாரிக்கப்பட்டனா். இருப்பினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவா்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனா். கஷோகி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சோ்ந்த ஜமால் கஷோகி, சா்ச்சைகளில் சிக்கியதால் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வந்தாா். அங்கு வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் அவா் கட்டுரைகள் எழுதியதுடன், சவூதி அரேபிய அரசையும், அந்த நாட்டு பட்டத்து இளவரசரையும் கடுமையாக விமா்சித்து வந்தாா்.
இந்தச் சூழலில், துருக்கியைச் சோ்ந்த ஹாடிஸ் செங்கிஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்காக, சில ஆவணங்களைப் பெறுவதற்கு அந்த நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கஷோகி கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 2-ஆம் தேதி சென்றாா். அங்கு அவா் மா்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டாா். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, கழிவுநீருடன் கலக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.