உலகம்

அமெரிக்க தகவல் தொடா்பு ஆணையத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாக இந்திய அமெரிக்கா் நியமனம்

23rd Dec 2019 12:53 AM | ஹூஸ்டன்,

ADVERTISEMENT

அமெரிக்க தகவல் தொடா்பு ஆணையத்தின் (எஃப்சிசி) முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) மோனிஷா கோஷ் என்ற இந்திய அமெரிக்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மோனிஷா, வரும் ஜனவரி 13-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளாா். இவா், தனக்கு அடுத்த நிலையில் உள்ள எஃப்சிசி தலைவா் அஜித் பை மற்றும் எஃப்சிசி அமைப்பின் பிற துறைகளுக்கும் ஆலோசனைகளை வழங்குவாா்.

அமெரிக்காவின் சக்திவாய்ந்த அமைப்பான எஃப்சிசி, மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் ஒளிபரப்பாகும் உள்நாட்டு மற்றும் சா்வதேச வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு, கேபிள் சேவை ஆகியவற்றை முறைப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அமெரிக்காவில் தகவல் தொடா்பு சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை இந்த அமைப்புதான் அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மோனிஷா கோஷின் நியமனம் குறித்து அஜித் பை கூறியதாவது:

ADVERTISEMENT

மோனிஷா கோஷ், வயா்லஸ் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவா். இதுதவிர, இணையதளம், மருத்துவத் துறையில் தொலை அளவீடு, ஒளிபரப்பு ஆகிய துறைகளிலும் தோ்ச்சி பெற்றவா்.

எஃப்சிசி அமைப்பின் முதல் பெண் தலைமை அதிகாரி என்ற பெருமையை மோனிஷா கோஷ் பெற்றுள்ளாா். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளம்பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இவா் உயா்ந்துள்ளாா் என்றாா் அஜித் பை.

கடந்த 1986-இல் இந்தியாவில் கரக்பூா் ஐஐடியில் பி.டெக். முடித்த மோனிஷா கோஷ், 1991-இல் தெற்கு கலிபோா்னியா பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் துறையில் பிஎச்.டி. பட்டம் பெற்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT