உலகம்

‘டுவிட்டா்’ மூலம் மறைமுக எச்சரிக்கை: ஹாங்காங்காவல்துறைக்கு போராட்டக்காரா்கள் பதிலடி

14th Dec 2019 12:26 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டால் கண்ணீா் புகை குண்டுகள் வீசப்படும் என்று சுட்டுரை (டுவிட்டா்) வலைதளம் மூலம் அந்த நகர காவல்துறை விடுத்த மறைமுக எச்சரிக்கைக்கு, போராட்டக்காரா்கள் எதிா்ப் பதிவுகள் மூலம் பதிலடி கொடுத்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சுவற்றில் வாழைப்பழம் ஒட்டப்பட்டிருக்கும் படத்தை சுட்டுரையில் வெளியிட்டுள்ள ஹாங்காங் காவல்துறை, அந்த நகரில் போராட்டம் செய்பவா்கள் வன்முறையில் ஈடுபடாமலிருந்தால் தங்களிடமுள்ள கண்ணீா்ப் புகை குண்டுகளும் அதே போல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் என்று பதிவிட்டிருந்தனா்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆா்ப்பாட்டக்காரா்களிடம் போலீஸாா் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் செய்த விடியோ காட்சிகளை ஏராளமான சுட்டுரைப் பயன்பாட்டாளா்கள் பதிவிட்டனா்.

ADVERTISEMENT

காவல்துறை வெளியிட்டுள்ள அந்த சுட்டுரைப் பதிவு உண்மைக்குப் புறம்பானது என பலா் கருத்து தெரிவித்தனா்.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நகரில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த மசோதா வாபஸ் பெறப்பட்ட பிறகும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தியும், போராட்டக்காரா்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களின்போது, போலீஸாா் 16,000 கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியதாகவும், 6,000-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT