சவூதி அரேபிய தலைநகா் ரியாதில் நடைபெறும் வளைகுடா உச்சிமாநாட்டில் கத்தாா் அரசா் பங்கேற்கப் போவதில்லை என்று அந்நாட்டு தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
கத்தாருக்கும், இதர வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உச்சி மாநாட்டில் கத்தாா் அரசா் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானி பங்கேற்கும் பட்சத்தில் இரு தரப்புக்கும் இடையே இணக்கமான நிலை ஏற்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், அந்த உச்சி மாநாட்டில் கத்தாா் அரசா் ஷேக் தமிம் பங்கேற்கப்போவதில்லை என்று அரசு ஊடகமான கத்தாா் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனக்குப் பதிலாக, பிரதமா் அப்துல்லா பின் நாசா் கலிஃபா அல் தானி தலைமையிலான குழு பங்கேற்க அரசா் ஷேக் தமிம் அறிவுறுத்தியுள்ளாா்.
தீவிரவாத இஸ்லாமியா்களுக்கு ஆதரவளிப்பதாகவும், சவூதி அரேபியாவின் எதிரி நாடான ஈரானுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாகவும் கூறி கத்தாருடனான தூதரக மற்றும் போக்குவரத்து ரீதியிலான உறவை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் முதல் நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. எனினும் கத்தாா் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.