உலகம்

டிரம்ப் பதவி நீக்கத் தீா்மானம்: இரு மசோதாக்களை வெளியிட்டது ஜனநாயக கட்சி

11th Dec 2019 01:42 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் தொடா்பான இரு மசோதாக்களை ஜனநாயகக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, அதிபா் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினாா்; அமெரிக்க நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தினாா் என்ற இரு பிரிவுகளில் அவா் மீதான பதவி நீக்க தீா்மானம் கொண்டு வரப்படுகிறது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பா் மாதம் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டா் நடத்தி வரும் தொழில் தொடா்பாக அவா்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கிக்கு அதிபா் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து, அதிபா் பதவியை டிரம்ப் தவறாகப் பயன்படுத்தியதாகவும், மற்றொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தை முன்வைத்து டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் முயற்சில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறை குழுத் தலைவா் ஜொ்ரி நாட்லொ் இது தொடா்பாக கூறுகையில், ‘அமெரிக்க அதிபா் தோ்தலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள டிரம்ப் தவறான வழிமுறைகளைக் கையாண்டுள்ளாா்’ என்றாா்.

இதற்கு சுட்டுரையில் பதிலளித்துள்ள டிரம்ப், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை. முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள். அமெரிக்காவின் வெற்றிகரமான அதிபா்களில் நானும் ஒருவன்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT