உலகம்

தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி: கிங்ஸ் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி பேச்சு

30th Aug 2019 06:10 PM

ADVERTISEMENT

 

தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு நிச்சயமாக செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிங்ஸ் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கூறினார்.

லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரை, இந்த கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகின்ற அனைத்து மருத்துவர்களையும் மனமார, உளமார இந்த நேரத்தில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். அது மட்டுமல்லாமல், கிங்ஸ் மருத்துவமனையின் கிளை ஒன்றை தமிழகத்திலே அமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள், அதற்கான முழு ஆதரவை தமிழக அரசு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இங்கு இருக்கின்ற மருத்துவ வசதிகள் அனைத்தும் தமிழக மக்களுக்கும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த கிங்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு தமிழக அரசின் சார்பாக, மக்களின் சார்பாக நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

ADVERTISEMENT

நான் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்ததில், கிங்ஸ் மருத்துவமனை உண்மையிலேயே ஒரு தலைசிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது. சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் திட்டம் பாராட்டுக்குரியது. இன்றைக்கு ராபின்ஸன் ஹெலிகாப்டர் இருக்கின்ற இடத்தை பார்வையிட்டோம். சென்னையிலும் அதனை அமைப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கின்றோம்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூரத்திலிருந்து நகரத்திற்கு வந்து சிகிச்சை பெறமுடியாதபோது, விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக குறித்த காலத்தில்  மருத்துவமனைக்கு கொண்டு வந்து நோயை குணப்படுத்தி அவர்களை பிழைக்க வைக்கக்கூடிய அரிய சாதனையை கிங்ஸ் மருத்துவமனை செய்து கொண்டிருக்கிறது. அதுபோன்றே, தொலைதூரத்தில் உள்ள இடங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்ற, தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு நிச்சயமாக செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT