உலகம்

கராச்சி வான் எல்லையை மூடியது பாகிஸ்தான்

29th Aug 2019 02:53 AM

ADVERTISEMENT


பாகிஸ்தானின் கராச்சி வான்எல்லைப் பகுதியை புதன்கிழமை (ஆக. 28) முதல் சனிக்கிழமை (ஆக. 31) வரை மூடுவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் கராச்சி வழியாக நடைபெறும் சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் இந்தியா மீது அதிருப்தியில் உள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டித்தது. அதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ரயில், பேருந்து சேவைகளையும் நிறுத்தியது. 
இந்நிலையில், பாகிஸ்தான் வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிப்பது குறித்து பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தி வருவதாக அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவத் சௌதரி சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து புதன்கிழமை கராச்சி வான்எல்லையை மூடி அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், கராச்சி பகுதி வான்எல்லை தற்காலிகமாக 4 நாள்களுக்கு மூடப்படுகிறது. ஆகஸ்ட் 28 முதல் 31-ஆம் தேதி வரை கராச்சியின் வான்எல்லையில் உள்ள 3 பாதைகளும் மூடப்படும். செப்டம்பர் 1-ஆம் தேதி மீண்டும் கராச்சி வான்எல்லை திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது,  பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை  தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் வான்பரப்பு முழுவதிலும் விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. அதன் பின்னர், மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு மட்டும் தடையைத் தொடர்ந்தது. இறுதியாக, ஜூலை 16-ஆம் தேதி பாகிஸ்தான் வான்எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வான்எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT