அமெரிக்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சீக்கியர் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு இனவெறி காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், அதுதொடர்பாக உடனடியாக முடிவுக்கு வர முடியாது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கலிஃபோர்னியா மாகாணம், டிரேசி நகரிலுள்ள கிரெட்சென் டாலி பூங்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பரம்ஜித் சிங் (64) ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவரை மர்ம நபரொருவர் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இந்தத் தாக்குதலில் பரம்ஜித் சிங் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பது இதுவரை தெரியாத நிலையில், தாக்குலுக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரம்ஜித் சிங் சீக்கியர் என்பதால் அவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் டிரேசி நகர மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.